×

மாயன் கால உணவு – மரவள்ளி!

அடைமழை பொழிந்து, குளிரால் நடுங்கும் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் தமிழக கிராமப்புறங்களில் மரவள்ளிதான் பிரதான உணவாக இருக்கும். மானாவாரியாக பயிரிடப்பட்ட மரவள்ளி அந்த சமயத்தில் அறுவடைக்கு வரும். மழை பெய்து மண் இளகியிருக்கும். அப்போது மரவள்ளியை வேரோடு பெயர்த்தெடுப்பார்கள். நிலத்தில் தேங்கிய கிழங்குகளை மண்வெட்டியால் அகழ்ந்தெடுப்பார்கள். திரட்சியாக வளர்ந்த கிழங்குகளை எடுத்துச் சென்று அப்படியே சுட்டு சாப்பிடுவார்கள். தண்ணீரில் வெறும் உப்பை மட்டுமே போட்டு அவித்து சாப்பிடுவார்கள். மஞ்சள், கடுகு இருந்தால் போதும். அவை தரும் ஆனந்த ருசி. இப்படி மரவள்ளியை ரசித்து ருசித்திருக்கிறார்கள் தமிழகத்தின் கிராமவாசிகள். தமிழகம் மட்டுமல்ல, உலகமே மரவள்ளியை பிரதான உணவாக உண்டிருக்கிறது.

கி.மு. 6,600 காலகட்டத்திலேயே மரவள்ளியைப் பயிரிட்டு உணவாக்கி வந்திருக்கிறார்கள். மெக்சிகோ நாட்டில் குடா என்ற தாழ்நிலப் பகுதி இருக்கிறது. அங்குள்ள சான் ஆண்ட்ரெஸ் எனும் தொல்லியல் களத்தில் மரவள்ளியின் மகரந்தப்பொடி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எல் சல்வடோர் நாட்டில் 1,400 ஆண்டுகளுக்கு முந்தைய மாயன் காலத்துத் தொல்லியல் களம் இருக்கிறது. இதற்கு ஜோயா டி செரன் என்று பெயர். இப்பகுதியில் மரவள்ளியைப் பயிரிட்டு பயன்படுத்தியதற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. மாயன் காலண்டரை மிக முக்கிய ஆவணமாக சொல்வார்கள். அதில் கணித்து கூறப்பட்ட பல சம்பவங்கள் நடந்தேறி இருப்பதாக சொல்வார்கள். அதில் ஒன்றுதான் 2012ல் உலகம் அழியும் என்பது. இந்த ஆண்டில் பலர் பீதியால் திரிந்தார்கள்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மாயன் காலகட்டத்தில் மரவள்ளி ஒரு பிரதான உணவாக கோலோச்சி இருக்கிறது. மரவள்ளி காட்டுப்பயிராக விளைந்து நிற்கும் என்ற தகவலும் இருக்கிறது. இதை 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில் பயிரிட்டு பயன்படுத்த தொடங்கினார்கள் என்றும் கூறப்படுகிறது. எது எப்படியோ மரவள்ளியை பழங்காலத்தில் நல்ல உணவாக பார்த்திருக்கிறார்கள் என்று மட்டும் தெரிகிறது. தென் அமெரிக்காவின் வடக்குப்பகுதி, நடு அமெரிக்காவின் தெற்குப்பகுதி, கரீபியப் பகுதி ஆகியவற்றை ஸ்பானியர்கள் ஆக்கிரமித்திருந்த காலத்திற்கு முன்பே, அப்பகுதிகளில் வாழ்ந்த மக்களின் முக்கிய உணவாக மரவள்ளி இருந்திருக்கிறது. போர்ச்சுக்கீசியர், ஸ்பானியர் குடியேற்ற காலங்களிலும் இப்பகுதியில் மரவள்ளி தொடர்ந்து பயிரிடப்பட்டிருக்கிறது.

அமெரிக்க கண்டத்தை கொலம்பஸ் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே, அங்கு வாழ்ந்த மக்களின் முக்கிய உணவாக மரவள்ளி விளங்கி இருக்கிறது. அவர்களின் பழங்கால ஓவியங்களில் மரவள்ளியும் இடம் பிடித்திருக்கிறது. மரவள்ளிக் கிழங்கில் அரிசி உணவுகளுக்கு இணையான மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்) இருப்பதால், இதனை ஆப்பிரிக்கா போன்ற வறுமையான நாடுகளில் இன்றும் முக்கிய உணவாகப் பயன்படுத்துகிறார்கள். இதனால் ஆப்பிரிக்காவில் மரவள்ளி அதிகளவில் பயரிடப்படுகிறது. கிபி 17ம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்கள் மூலம் கேரளா வழியாக இந்தியா நுழைந்த மரவள்ளி நம்மூரில் இன்னும் செல்வாக்குடன் இருக்கிறது. தமிழகத்தில் மரவள்ளிக்கு ஏழிலைக்கிழங்கு என்ற பெயர் இருக்கிறது. இதுதவிர குச்சிக்கிழங்கு, குச்சிவள்ளிக் கிழங்கு, மரச்சீனிக் கிழங்கு என பல பெயர்கள் மரவள்ளிக்கு உண்டு. மரவள்ளியை இன்று நாம் நேரடி உணவாக உண்பதோடு, உப்புமா, பாயாசம், கஞ்சி என பல வடிவங்களில் உட்கொள்கிறோம்.

The post மாயன் கால உணவு – மரவள்ளி! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Iapasi ,Karthiga ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...